மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ளது நெம்மேலி மீனவ கிராமம். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் மீனவர்கள் கடற்கரையில் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் கடல் அரிப்பு காரணமாக கரையில் அமைக்கப்பட்டு இருந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் போக்குவரத்து பாதிக்கப் பட்டு மீன்பிடி தொழில் செய்ய சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதையடுத்து நெம்மேலியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இதற்கிடையே சட்டசபையில் நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது நெம்மேலி மீனவ குப்பத்தில் தூண்டில் வளைவு மீன் இறங்கு தளம், வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதன்காரணமாக நெம்மேலி மீனவ கிராம மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இதனை மீனவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.