சென்னை :
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முக நாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நேற்று நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, “அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி” என்று உரிமையோடு சொன்னார். அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை.
அவரின் திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்றது, மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தது என்று அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். 'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன். அவர் பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார்.
உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி கருணாநிதியின் நிழலாக இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதி அவர்களுக்கு இன்னொரு கையாக இருந்தவர் அவர். சுமார் 50 ஆண்டுகாலம் கருணாநிதியுடன் பயணித்தவர் அவர். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும் கோபாலபுரம் வீட்டிலேயே இருப்பார்.
கோபாலபுரம் வீட்டிற்குள் நுழைந்ததும் வலதுபுறம் அவரின் அறை இருக்கும், அங்குள்ள கணினி முன் அமர்ந்து எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார். தலைவரைப் பார்க்க திமுக நிர்வாகிகள் வந்தாலும் நானும் அவரும் அந்த அறையில்தான் இருப்போம்.
கருணாநிதி அவர்களைப் பிரிந்து அவராலும் இருக்க முடியாது. அவரைப் பிரிந்து கருணாநிதியாலும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை.
கருணாநிதி மறைந்த பிறகும், அவர் இருந்த காலத்தில் கோபாலபுரம் வீட்டுக்கு எப்படி வருவாரோ அதேபோல் வந்து எழுதுவது, அச்சிடுவது, மெய்ப்புத் திருத்தம் செய்வது என சண்முகநாதன் இருப்பார். கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய அனைத்துக் கடிதங்களையும் பல்வேறு தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடும் அரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவை அனைத்தும் அச்சில் இருக்கும் நிலையில் சண்முகநாதன் மறைந்தது அதிர்ச்சியடைய வைக்கிறது.
கருணாநிதி வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் எழுதும் தகவல் களஞ்சியம் அவர். அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலை முழுமையாக அறிந்த வரலாற்றுப் புத்தகம் அவர். அனைத்துக்கும் மேலாக எங்களது கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது.
எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அவரை 'குட்டி பி.ஏ.' என்றுதான் அழைப்போம். இருப்பவர்களிலேயே அவர்தான் வயதால் இளைஞர். இன்று எங்கள் அனைவருக்கும் மூத்த அண்ணன் நிலையில் இருந்தார். தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது.
இவ்வாறு தமது இரங்கல் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.