திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளவாய்ப்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு சிறப்பு 'ஜாம்புரி' என்ற பெயரில் நேற்று தொடங்கி பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் சாரண, சாரணியர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் கலந்து கொள்கிறார்கள்.
சாரணர்களுக்காக சிப்காட் வளாகத்தில் சாரணர்கள் தங்குவதற்கு ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவு தயாரிப்பு கூடங்கள், மருத்துவ உதவி மையங்கள், கருத்தரங்கு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரகணக்கான சாரணர்கள் அங்கு குவிந்து விட்டதால் சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சாரணர்கள் 24-க்கும் மேற்பட்ட சாகசப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகைகள் பாலம், குரங்கு பாலம், பீம் ஏறுதல், டயர் டனல், தீ பள்ளம், துப்பாக்கிச் சுடுதல், அம்பு எறிதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 72 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பயிற்சிகளில் பங்கேற்றுள்ள மாணவ-மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.