சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி சாமியப்பாநகர் 3வது கிராசை சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி பிரியா. இவர் இன்று காலை தாதகாப்பட்டி உழவர் சந்தையில் காய்கறி வாங்கி விட்டு மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
வீடு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்தபடி வந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரியா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க செயினை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கொள்ளையர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
இது குறித்து அன்னதானப்பட்டி போலீசில் பிரியா புகார் கொடுத்துள்ளார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.