சேலம்:
சேலம் 3 ரோடு அருகே உள்ள திருமண மஹாலில் மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் யோகா பயிற்சியாளர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தனராஜ் என்பவர் பயிற்சி அளித்தார்.
போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைத்து, உடலை எப்படி ஆரோக்கிய மாகவும், சுறுசுறுப்பாகவும் பொதுமக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கான செய்முறை மூலம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் அதிக நேரம் பொதுமக்கள் மத்தியிலும் மற்றும் கூட்டங்களில் காவலர்கள் பணியில் ஈடுபடும் போது ஏற்படும் இடுப்பு வலி மற்றும் மூட்டு வலியை குறைப்பதற்கான பயிற்சி, உடல் உபாதைகளை குறைப்பதற்கான பயிற்சி போன்றவையும் அளிக்கப்பட்டன.
பயிற்சி முகாமுக்கு சேலம் மாநகர துணை கமிஷனர் மாடசாமி தலைமை தாங்கினார். இதில் உதவி கமிஷனர்கள் முருகேசன், பாபு உள்பட அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, அழகாபுரம், பள்ளப்பட்டி, சூரமங்கலம், கருப்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.