பனமரத்துப்பட்டி:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டம் விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி பயின்று வருகின்றனர். அவர்கள் பனமரத்துப்பட்டி வட்டாரம் நிலவாரப்பட்டி கிராமத்தில் நஞ்சில்லா மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
தோட்டக்கலை துறை மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டத்தின் பயன்கள், சாகுபடி முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றி செயல்விளக்கம் மூலம் செய்து காட்டப்பட்டது. கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் அனைவரும் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே பயிரிடலாம்.
மழை வளமும் மண் வளமும் இருந்தால்தான் தோட்டமும் சாத்தியமாகும் என்று நினைப்பவர்கள் வீட்டு மாடியில் அல்லது சற்று பரந்திருக்கும் பால்கனியிலும் இதை வெற்றிகரமாக சாத்தியமாக்கலாம் என விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.