சேலம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மற்றும் மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்வு செய்ய உள்ளனர்.
இதனால் அரசியல் கட்சியினர் கவுன்சிலர் பதவியை பிடிக்க அதிகம் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக தலைவர், மேயர் பதவியை குறி வைத்து தங்களது கட்சி மேலிட சிபாரின் பேரில் தேர்தல் களத்தில் குதித்தனர்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 695 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் 439 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு பதிவிற்கு பின்னர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாது காப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனிடையே வார்டுகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் இதர அரசியல் கட்சி வேட்பாளர்கள் அடுத்த கட்ட நகர்வுகளை தொடங்கி உள்ளனர். தலைவர் பதவியை குறி வைக்கும் பிரமுகர்கள் தங்க ளுக்கு தேவையான மெஜாரிட்டியை பெறுவதற்காக இப்போதே காய் நகர்த்த தொடங்கி உள்ளார்கள்.
வெற்றி பெறும் நிலையில் இருக்கும் வேட்பாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர் கட்சி ரீதியாகவும், கட்சிக்கு அப்பாற்பட்டும் கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க இப்போதே முயற்சித்து வருகிறார்கள்.
வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் தேர்தல் நடவடிக்கைகள் வருகிற 24-ந் தேதி முடிவு பெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மார்ச் மாதம் 2-ந் தேதி பதவி ஏற்கின்றனர். அன்றே முதல் கூட்டமும் நடைபெறுகிறது.
பின்பு மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் மாதம் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.