சேலம்:
சேலம் பழைய சூரமங்கலம் மஜித்தெருவில் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனத்தில் சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறைபிடித்தனர். இதனால் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தப்பிஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, சுமார் 2 டன் ரேஷன் அரிசியை கடத்த முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்த முயன்று தப்பிஓடிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
போலீஸ் நடத்திய விசாரணையில், சூரமங்கலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விக்னேஷ் (வயது 28), மற்றும் சூர்யா ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான அவர்கள் இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று அந்த பகுதியில் பதுங்கியிருந்த விக்னேசை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சூர்யாவை தேடி வருகின்றனர்.