சேலம்:
சேலம் டவுன் மேட்டு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 43). இவரது மனைவி விஜயஸ்ரீ. இவர் இன்று காலை 6 மணியளவில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடுவதற்காக வெளியே வந்தார்.
அப்போது வீட்டு வாசல் அருகே வாலிபர் ஒருவர் முகத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயஸ்ரீ தனது கணவரிடம் தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அருண்குமார் உடனடியாக சேலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பொறுப்பு இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி, கீழ் வீதி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் சேலம் டவுனில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இறந்து கிடந்த சுரேஷின் முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாலையில் நடந்து வரும் போது ஏதேனும் வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சுரேஷ் இறந்து கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.