உள்ளூர் செய்திகள்

மேட்டூர் உபரி நீர் திட்ட குழாய் பதிக்கும் பணி 85 சதவீதம் நிறைவு

மேட்டூர் உபரி நீர் திட்ட குழாய் பதிக்கும் பணி 85 சதவீதம் நிறைவடைந்தது.

மாலை மலர்

சேலம்: 

மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா வடிநிலக் கோட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடி மதிப்பில் கடந்த 2021 -ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

நீரேற்று திட்டம்  இதன்படி, மேட்டூர் அணை அருகேயுள்ள திப்பம்பட்டியில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய் மூலம் அடுத்தடுத்த ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில்   திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டப் பணியில் ஏரிகளுக்கு உபரிநீரைக் கொண்டு செல்ல நிலத்தடியில் குழாய் பதிக்கும் பணி மற்றும் தொடர்ச்சியாக  உள்ள அடுத்தடுத்த ஏரிகளை இணைக்கும் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகாரிகள் பேட்டி இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியதாவது:-

மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் முதல்கட்டமாக திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய் மூலம் காளிப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து சின்னேரி, ராயப்பன் ஏரி, மானாத்தாள் ஏரி, டி.மாரமங்கலம்  தொளசம்பட்டி ஏரி, பெரியேரிப்பட்டி ஏரி, தாரமங்கலம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் கடந்தாண்டு நீர் நிரப்பப்பட்டது.

இந்நிலையில், அடுத்தடுத்த ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படுவதற்கு   நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அடுத்த விருதாசம்பட்டி அருகே 750 மீட்டர் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதும் நங்கவள்ளி, வனவாசி உள்பட அடுத்தடுத்த 30 ஏரிகள் இணைப்பு பெற்றுவிடும். இத்திட்டத்தில் பி.என்.பட்டி ஏரி, செக்கான் ஏரி, கொட்டிக்குட்டை ஏரி, வடுகப்பட்டி ஏரி ஆகியவற்றுக்கு உபரிநீர் வழங்கப்பட உள்ளது.

85 சதவீதம் நிறைவு  தற்போது வரை ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.  

இதன் காரணமாக, ஜுலை மாதத்துக்குள் திட்டத்தில் உள்ள 50 சதவீதம் ஏரிகளுக்கு உபரிநீரை வழங்கிட முடியும். நிலம் கையகப்படுத்தும் பணியில் மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஒட்டுமொத்த பணிகளும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.