உள்ளூர் செய்திகள்

இந்திய அரசின் எஸ்.எஸ்.சி. உயர்நிலை தேர்வு இறுதி முடிவு வெளியீடு

இந்திய அரசின் எஸ்.எஸ்.சி. உயர்நிலை தேர்வு இறுதி முடிவு வெளியீடு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 13,088 பேர் தகுதி.

மாலை மலர்

சேலம்:

இந்திய அரசு பணியாளர்  தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி.) ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு- 2019 அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி ஆகும். இந்த தேர்வு டயர்-1, டயர்-2, டயர்- 3 என 3 அடுக்குகளை கொண்டது. டயர்-1 தேர்வில் வெற்றி பெற்றால்  தான் டயர்-2 தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

அதன்படி டயர்-1 தேர்வு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை   பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள், இளநிலை, முதுநிலை படித்தவர்கள் என பல லட்சம் பேர் எழுதினர்.  

குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி,  ஈரோடு, கரூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர் எழுதினார்கள்.  இதில்  தேர்ச்சி பெற்றவர்கள்  டயர்- 2 தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து டயர்-3 திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள்  28.02.2022 அன்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இறுதி முடிவுகள் கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்திய அரசு பணியாளர்  தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதில்  13,088 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.   மொத்தம் 5,257  பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள பணியிடங்கள்,  பிறந்த தேதி, டயர்-2 மதிப்பெண், மொத்த மதிப்பெண்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.