வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு, அண்மையில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேரடி நெல் கொள்முதல் கிடங்கு திறக்கப்பட்டது.
இந்த கிடங்களில் வைக்கப்பட்டுள்ள, நெல் பதிர் நீக்கி தரம் பிரிக்கும் எந்திரத்தில் இருந்து வெளியேறும் தூசி பறப்பதால் மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து இப்பகுதி மக்கள் நெல் கொள்முதல் கிடங்கிலுள்ள எந்திரத்தை இயக்க விடாமல் முற்றுகையிட்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் மாணிக்கம் தலைமையில் ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள், நெல் கொள்முதல் கிடங்குக்கு சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தூசி வெளியேறுவதை தடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.