உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் விபத்தில் காயம்-பொதுமக்கள் மறியல்

சேலம் அருகே பள்ளி மாணவியும், மாணவர் ஒருவரும் சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சாலையில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

சூரமங்கலம்:

சேலம் சித்தர் கோவில் அருகே உள்ள லகுவம்படியை சேர்ந்தவர் ஹிட்லர் (வயது 50). இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் மேனகா காந்தி (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மேனகாவின் தம்பி அபிஷேக் (11). இவன் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பள்ளி செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றனர். அப்போது ஒருவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அவர்கள் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மேனகா காந்தி மற்றும் அவருடைய தம்பி அபிஷேக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர், வண்டியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அந்த பகுதி மக்கள் காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் அப்பகுதி மக்கள் லகுவம்பட்டி சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த இரும்பாலை போலீசார் மற்றும் சேலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிக வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர்பலியும் ஏற்படுகிறது’ என்றனர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.