உள்ளூர் செய்திகள்

மல்லூர் அருகே கிரேன் வண்டியில் சேலை சிக்கி பெண் கூலித் தொழிலாளி பலி

மல்லூர் அருகே கிரேன் வண்டியில் சேலை சிக்கி பெண் கூலித் தொழிலாளி பலியானார்.

மாலை மலர்

பனமரத்துப்பட்டி:

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிச்சம்மாள் என்கிற கோமதி (வயது 35). இவர் மல்லூரை அடுத்துள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் விவசாய கூலி வேலைக்காக சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் கோமதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக நாழிக்கல்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் சேலம்&நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மல்லூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கிரேன் வண்டியில் கோமதியின் சேலை எதிர்பாராதவிதமாக சிக்கியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கோமதியின் மீது கிரேன் வண்டியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.