உள்ளூர் செய்திகள்

சேலம் உழவர் சந்தைகளில் ரூ.76.21 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

தை அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.76.21 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

சேலம்:

சேலம்  மாவட்டத்தில் மொத்தம் 11 உழவர் சந்தைகள் உள்ளன. இதில் மாநகரில்  சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும்  புறநகரில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி,  இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் இருக்கும் உழவர் சந்தைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும்,  வீடுகளில் சாமிக்கு படையலிட்டு சமைப்பதற்காகவும் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.  பழங்கள், தேங்காய்,  வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் உள்ளிட்டவை அதிகமாக விற்பனை ஆனது. இதே போல், பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்தது.

அதுபோல் சேலம்  வ.உ.சி. தினசரி சந்தை,  திருமணிமுத்ததாறு கரையோர சந்தை, செவ்வாய்ப்பேட்டை சந்தை, ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி, கொளத்தூர், மேச்சேரி, தாரமங்கலம், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, மல்லியகரை, வீராணம், ஓமலூர், காடையாம்பட்டி உள்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள தினசரி சந்தைகள் மற்றும் காய்கறி கடைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை அமோகமாக நடந்தது. இதேபோல் மளிகை கடைகளிலும் விற்பனை களை கட்டியது.