உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 10 தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டியின்றி தேர்வு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம். நாமக்கல் மாவட்டங்களில் 10 தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மாலை மலர்

சேலம்:

தமிழகத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று  வேட்புமனுக்கள் வாபஸ் நடைபெற்று,  வேட்பாளர்  இறுதி  பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் சேலம் மாவட்டத்தில்  மேச்சேரி பேரூராட்சி 11--வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தனம் மற்றும் 13--வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சுமதி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

அதே போன்று தெடாவூர் பேரூராட்சி 7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் பாலசுந்தரம், கொளத்தூர் பேரூராட்சி 4--வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மங்கம்மாள் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 22 மற்றும் 25-வது வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் தலா ஒருவர் மட்டுமே தேர்தல் களத்தில் இருந்ததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  எனவே மீதமுள்ள 37 வார்டுகளில் 166 பேர் போட்டியிடுகின்றனர்.

பாண்டமங்கலம் பேரூராட்சி 7, 10, 14, 15 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்களான  சிவகாமி மகாமுனி,  சுகந்தி  சோமசேகர், முருகன், சோமசேகர் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதனால் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 11 வார்டுகளில் மட்டும் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பரமத்தி பேரூராட்சியில் 13-வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த மணி, பட்டணம் பேரூராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பத்மா ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 2 சுயேட்சை வேட்பாளர்கள்  மற்றும் 6 தி.மு.க. வேட்பாளர் கள் என மொத்தம் 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.