உள்ளூர் செய்திகள்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் துவரை கொள்முதல்

சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

மாலை மலர்

சேலம்:

தமிழ்நாட்டில், துவரை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த துவரையினை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் 610 மெ.டன் துவரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. 

இத்திட்டத்தில் சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்பட உள்ளன. இம்மையங்களில் துவரை குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.63  வீதம் நடப்பு நிதியாண்டில் வருகிற மார்ச் 15 ம் தேதி வரை முடிய கொள்முதல் செய்யப்பட உள்ளது. 

மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் துவரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.  இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள துவரை நியாயமான சராசரி தரத்தினை கொண்டிருத்தல் வேண்டும். 

அதாவது, இதர பொருட்கள் கலப்பிற்கு 2 சதவீத எடையாகவும், இதர தானியங்கள் கலப்பிற்கு 3 சதவீத எடையாகவும், சேதமடைந்த பருப்புகளுக்கு 3 சதவீத எடையாகவும், சிறிதளவு சேதமடைந்த பருப்புகளுக்கு 4 சதவீத எடையாகவும், முதிர்வடையாத மற்றும் சுருங்கிய பருப்புகளுக்கு 3 சதவீத எடையாகவும், வண்டுகள் தாக்கிய பருப்புகளுக்கு 4 சதவீத எடையாகவும், ஈரப்பதம் 12 சதவீத எடையாகவும், அதிக பட்ச வரம்பாக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சேலம், மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.