உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல்

சேலம் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய்கள் குறைந்த பட்ச ஆதாரவிலையில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மாலை மலர்

சேலம்:

தமிழ்நாட்டில், தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த அரவை கொப்பரையினை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம், விலை ஆதரவு திட்டத்தின்கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  

அதன்படி, சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தில் சேலம், மேச்சேரி மற்றும் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்படவுள்ளது. 

இந்த மையங்களில் அரவை கொப்பரை குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 வீதம் 2022-ம் ஆண்டில் வருகிற ஜூலை  31-ந்தேதி வரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்கான கிரயத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். 

இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களது விளைபொருளுக்கு அதிக விலை பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.