ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 30-வது வார்டு ஆதிதிராவிடர் காலனி, முனிசிபல் காலனி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் அந்த பகுதிகளில் சாக்கடை கால்வாய் மற்றும் கழிப்பிட வசதி இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தங்கள் பகுதிக்கு குடிநீர், சாக்கடை கால்வாய் மற்றும் கழிப்பிட வசதி கோரி ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் நேற்று காலையில், சேலம்-கடலூர் மெயின்ரோடு லீபஜார் அம்மா உணவகம் அருகே திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆத்தூர் போலீசார் மற்றும் நகரசபை அலுவலர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.
அப்போது அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் முடிந்த பிறகு அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என்றும், தற்காலிகமாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.