எடப்பாடி:
சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள, காவிரி பாசன பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு பயிர்களை ஆயிரக்கணக்கான மெழுகு வண்டு எனப்படும் விஷ வண்டுகள் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வகை வண்டுகள் மரவள்ளி, கரும்பு, பாக்கு உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இரவு தொடங்கும் நேரத்தில் அதிக எண்ணிக்கையில் படையெடுக்கும் இவ்வகை வண்டுகள் மழைக் காலங்களில் பரவலாக வெளிவர தொடங்கும்.
ஜூன் வண்டுகள் என்று அழைக்கப்படும் இவ்வகை வண்டுகள் பெரும்பகுதி சேகரிக்கப்பட்ட தொழு உரக் குவியல்கள், சிறு குன்றுகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இனப்பெருக்கம் அடைந்து மிக அதிக எண்ணிக்கையிலான படைகளாக உருவாகி பயிர்களைத் தாக்கிடும்.
இதனால் பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்து, மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சந்தியூர் வேளாண் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் மற்றும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ரவி ஆகியோர் வயல்களில் ஆய்வு செய்தனர்.
அவர்கள், பாதிக்கப்பட்ட காவிரி வடிநில பகுதியில் உள்ள மரவள்ளி பயிர் செய்யப்பட்ட வயல்களில் முகாமிட்டு இரவு நேரங்களில் படையெடுத்து வரும் மெழுகு வண்டுகளை பெரிய அளவிலான மின் விளக்குகள் அமைத்தும், இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் மின் விளக்கு பொறி உள்ளிட்ட பல்வேறு வகையான சாதனங்கள் வாயிலாக பிடித்தனர்.
பின்பு மெழுகு வண்டுகளை காட்டுப்படுத்திடும் முறை குறித்து விவசாயிகளுக்கு நேரிடை செய்முறை பயிற்சி அளித்தனர். இந்த ஆய்வில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ரவி, கிருஷ்ணவேணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அனுஷா, வேளாண் உதவி இயக்குனர் சுமதி உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு இம்முறையில் மெழுகு வண்டுகளின் தாக்குதலை கட்டுப்படுத்திடுமாறு அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.