வாழப்பாடி:
சேலம் சந்திப்பு விருதாச்சலம் மார்க்கத்தில், சேலத்தில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் வாழப்பாடி ரெயில் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில், சேலம் – விருத்தாசலம் பயணிகள் ரெயில், சேலம் – சென்னை எழும்பூர் விரைவு ரெயில் மற்றும் வாரந்திர சிறப்பு விரைவு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடம் அண்மையில் மின் பாதையாக மாற்றப்பட்டதால், சரக்கு ரெயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் அடிக்கடி ரெயில்கள் வந்து செல்வதால், வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின்வழி ரெயில்பாதையை மக்கள் கடந்து செல்வதை தடுக்க, சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால், வாழப்பாடி அக்ரஹாரம், குமர வடிவேல் தெரு, அய்யாவுக்கவுண்டர் தெரு, பழனிபண்டாரம் தெரு, காளியம்மன்நகர், மசூதி தெரு, காசிப்படையாச்சி தோட்டம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள், ரெயில்பாதையை கடந்து பேருந்து நிலையம், கடைவீதி பகுதிக்கு 2 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, வாழப்பாடியில் பேருந்து நிலையமும், ரெயில் நிறுத்தமும் அருகருகே அமைந்திருந்தும், பேருந்து நிலையத்தில் இருந்து ரெயில் நிறுத்தத்திற்கும், ரெயில் நிறுத்தத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கும் ரெயில்பாதையை கடந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால், பயணிகளும், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாழப்பாடி பேரூராட்சி பகுதி மக்கள், மின்வழி ரெயில்பாதை கடந்து செல்லுவதற்கும் வசதியாக, சேலம்–விருத்தாசலம் ரெயில்பாதையின் குறுக்கே, பேருந்துநிலையம் –ரெயில் நிறுத்தம் இணைப்பு, எம்ஜியார், சித்தன் வீட்டு இணைப்பு, மசூதிதெரு அய்யாக்கவுண்டர் தெரு இணைப்பு, குமரவடிவேல் தெரு–பழனிபண்டாரம் தெரு இணைப்பு ஆகிய இடங்களில் நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டுமென, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.