சேலம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலதிற்குட்பட்ட கோட்டம் எண்.4 சாரதா வித்யாலய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 9 வாக்குச்சாவடிகள், கோட்டம் எண்.16 புதூர் எக்ஸ்டன்சன் குளுனி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 9 வாக்குச்சாவடிகளில் ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி எண் எழுதப்பட்டுள்ளதா, வாக்குச்சாவடியில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுவது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இருக்கை வசதி, முகவர்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் குறித்தும், வாக்குச்சாவடியில் மின்வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் சிறமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாய்வுதள வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், வாக்காளர்கள் வாக்களிப்பதை கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.