சேலம்:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் மற்றம் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். பேரூராட்சிகளில் நங்கவள்ளி, வனவாசி, காடையாம்பட்டி, பேளூர் ஆகிய 4 பேரூராட்சிகளில் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மற்ற இடங்களில் தலைவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
எடப்பாடி நகராட்சிக்கான நகரமன்ற தலைவர் தேர்தல் அதிகாரி சேகர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. 40 வார்டுகள் கொண்ட இந்த நகராட்சியில் தி.மு.க 16, அதிமுக 13, காங்கிரஸ் 1 உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.எம்.எஸ்.பாஷா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.எம்.முருகன் 13 வாக்குகள் மட்டுமே பெற்றார். நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட டி.எம்.எஸ்.பாஷா எடப்பாடி நகர செயலாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 13 வார்டுகளில் தி.மு.க. வினரும், சுயேட்சையாக ஒருவரும், அ.தி.மு.க.வில் ஒருவரும் கவுன்சிலராக வெற்றி பெற்றனர்.
இன்று காலை 10 மணி அளவில் பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவராக முருக பிரகாஷ் 14 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வெற்றிபெற்ற முருக பிரகாசுக்கு ஆட்டையாம்பட்டி செயல் அலுவலர் குணாளன் சான்றிதழ் வழங்கினார்.
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் தி.மு.க. சார்பாக அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருமலை அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த மேனகா போட்டியிட்டார். இதில் திருமலைக்கு 8 வாக்குகளும், போட்டி தி.மு.க. வேட்பாளர் மேனகாவுக்கு 7 வாக்குகளும் கிடைத்தன. ஒரு வாக்கு வித்தியாசத்தில் திருமலை வெற்றி பெற்று தலைவர் ஆனார்.