ஆத்தூர்:
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தில், முத்துமலை அடிவாரத்தில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரமாக, 146 அடி உயரத்தில் முருகன் சிலையுடன் வேல் வடிவில் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரமுள்ள விஸ்வரூப மூர்த்தியாக முருக பெருமான் எழுந்தருளியுள்ளார். இந்த கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
இதையொட்டி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை தொடங்கியது. பின்பு பூர்ணா ஹுதி தீபாராதனை, தீர்த்த குடங்கள் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து 10.30 மணி அளவில் முத்துமலை முருகன் மற்றும் கணபதி விமான மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு தீபாராதனை காட்டப் பட்டது. கும்பா பிஷேகத்தை நாயனார் திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் ஆறுபடை முருகன் கோவில் குருக்கள் நடத்தி வைத்தனர்.
கும்பாபி ஷேகத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பாரம்பரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளாங்குறிச்சி ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள்,
திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம் குரு மகா சந்நிதானம் சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் 4-வது பட்டம் குமரகுருபர சுவாமிகள், வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், மலேசியா திருமுருகன் திருவாக்கு திருபீடம் அதிபர் பாலயோகி சுவாமிகள் ஆகிய மடாதிபதிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினர்.
கும்பாபிசேகத்துக்கான ஏற்பாடுகளை முத்துமலை முருகன் டிரஸ்ட் தலைவர் ஸ்ரீதர் செய்திருந்தார். உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் உருவத்தை பக்தர்கள் முழுமையாக கண்டு ரசிப்பதற்கு வசதியாக 146 அடி உயரத்திற்கும் நவீன லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
முருகனை அருகில் தரிசனம் செய்ய ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. கும்பா பிஷேகத்தை முன்னிட்டு முருகன் வேலுக்கு பாலபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதா னமும் வழங்கப் பட்டது. கும்பாபிசேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.