சேலம்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சுண்டைக்காய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 39). கொத்தனார். இவரது மனைவி சாந்தா (32). கணவன்-மனைவி இருவரும் கோவை மாவட்டத்தில் கட்டட வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் சொந்த ஊருக்கு செல்ல நேற்று கோவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். கோவை& சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராக்கிப்பட்டி அடுத்த சேனைபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக சக்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சக்தி, சாந்தா இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு ராக்கிப்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சக்தி பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற சாந்தா பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் சக்தியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.