சேலம்:
சேலத்தில் ஜாகீர் அம்மாபாளையம் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இக் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி முதல் பல்வேறு விதமான ஹோமம், பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து 164 யாகசாலை பூஜையில் 200 வேத விற்பன்னர்களால் ஹோமம் நடத்தப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது.
அதிகாலை 3 மணி முதல் 6 கால யாக பூஜை மற்றும் ருத்ரம் திருமுறை பாராயணம் நடைபெற்று. மேலும் 164 யாக சாலையில் விசேஷ ஹோமங்கள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் தீர்த்த குடத்தை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீ காவடி பழனியாண்டவர் கோவில் ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து மூலஸ்தான கோபுரத்திற்கும், அதனைத் தொடர்ந்து சீரடி சாய்பாபா, வெங்கடாஜலபதி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 108 லட்சுமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக வைபவத்தை காண சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கினர்.
ஸ்ரீ காவடி பழனியாண்டவர் உள்பட அனைத்து சாமிகளையும் வழிபட்டனர். பக்தர்கள் மீது புண்ணிய தீர்த்தம் தெளிக்கப் பட்டது. அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை அருள்வாக்கு சோமசுந்தரம் மற்றும் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.