பனமரத்துப்பட்டி, ஏப்.9
சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், வேளாண் காலநிலை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காற்றின் வேகமானது மணிக்கு 6 கி.மீ வரை வீசக் கூடும்.
தற்போது நிலவும் வெப்ப நிலையில் கால்நடைகள் தானாக முன்வந்து குடிப்பதற்கு போதுமான குடிநீர் வைக்க வேண்டும். வெப்பநிலை சற்று உயர்ந்து வருவதால் கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதை தவிர்க்க கோழி பண்ணைகளில் 2 ஓரங்களிலும் நனைந்த சாக்கை கட்டி விட வேண்டும்.
செம்மறி ஆடுகளில் அம்மை நோய் வராமல் தடுக்க அம்மை நோய் தடுப்பூசி போட வேண்டும். நாட்டுக்கோழிகளுக்கு புரதச்சத்து மிக்க அசோலாவை தீவனமாக அளிப்பதன் மூலம் விரைவான உடல் வளர்ச்சி அடைவதுடன் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.