வாழப்பாடி:
சேலம் மாவட்டம் மாம்பழம் சாகுபடிக்கு புகழ் பெற்றதாகும். வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி ஆகிய வட்டாரங்களில் ஏறக்குறைய 5,000 ஹெக்டேர் பரப்பளவில் நீண்டகால பலன் தரும் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, சேலம் பெங்களூரா, நீலம், அல்போன்சா, செந்துாரா, இமாம்பசந்த், பங்கனபள்ளி, மல்கோவா, குதாதாத் உள்ளிட்ட மாம்பழ ரகங்கள் சாகுபடியாகிறது. தற்போது மா மரங்களில் பூக்கள் வைக்கும் தருணம் என்பதால், பூச்சி நோய் தாக்குதல் ஏற்படலாம்.
பொதுவாக, நாவாய் தத்துப்பூச்சிகள், பாதிப்பு அதிகமாகத் தென்படலாம். இதனைத்தொடர்ந்து கரும் சாம்பல் படலநோய் தோன்றலாம். எனவே, மாவட்டம் முழுவதும் மா மரங்களில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுடன் இணைந்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விஞ்ஞானிகள் அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் எம்.பாலப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் அருள்குமார், மணிஆகியோரது தோட்டத்தில், தோட்டக்கலைத்துறை அலுவலர் விஜயலட்சுமியுடன் இணைந்து வயல் கள ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் மா மரத்தில் பூச்சி நோயை கட்டுப்படுத்த, 10 லிட்டர் தண்ணீரில் 6 கிராம் அசிடாமிபிரைடு அல்லது தயோமித்தாக்சோம் அல்லது இமிடாகுளோப்ரிட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும், 10 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் அளவில் நனையும் கந்தகத்தை கலந்து தெளிக்க நல்ல பலன் கிடைக்குமென ஆலோசனை வழங்கினர்.
மேலும் மா மர மகசூல், பூச்சி நோய் தாக்குதல் குறித்து ஆலோசனைகள் பெற சம்மந்தப்பட் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.