உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும்  அவசர காலமீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசின் மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் “சகி” பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு 2018-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சேவை மையத்தில் பணிபுரிய கூடுதல் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது  சுய விபரங்களை 18.03.2022 அன்று மாலை 5 மணிக்குள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அறை எண் 126-ல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத்  தெரிவிக்கப்படுகிறது.

4 வழக்கு பணியாளர் பணியிடங்கள் உள்ளன.  சமூகப் பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம்  மற்றும் முதுகலைப் பட்டம் பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு, தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருட பணி அனுபவம் பெற்றுள்ள பெண்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப் பிக்கலாம். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த  21-40 வயதுக்குட்பட்ட பெண்களாக இருத்தல் வேண்டும்.

1  இரவு காவலர் பணியிடம் உள்ளது. இப்பணிக்கு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் அனுபவம் கொண்டவர்கள் முன்னுரிமை அடிப்படை யில் தேர்வு செய்யப்படுவர்.

1 பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி கொண்ட நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்த 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் இப்பணிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். சமையல் தெரிந்த பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் அதில் கூறியுள்ளார்.