சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் அனைத்து மகளிர் விடுதிகளும் குழந்தைகள், மகளிருக்கான காப்பக சட்டம் 2014ன் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இது நாள் வரையில் முறையாக பதிவு செய்யப்படாத மற்றும் பதிவினை புதுப்பிக்காத தனியார் மகளிர் விடுதிகளை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம், வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று, சுகாதாரச் சான்று, புதுப்பித்தலுக்கு 3 வருட தணிக்கை கணக்கு ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்திட வேண்டும்.
மேலும், பதிவு செய்யப்படாத மற்றும் பதிவுகளை புதுப்பிக்காத தனியார் மகளிர் விடுதிகள் பதிவு செய்திட மே மாதம் 5ந்தேதி மாலை 5 மணிக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.