சேலம்:
சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 47 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற 60 உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்கிறது.
இந்த பதவிகள் ஒதுக்கீடு தொடர்பான பேச்சு வார்த் தையில் கூட்டணி கட்சிகள் தி.மு.க.வுடன் ஈடுபட்டது. இதையடுத்து சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து, தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் மொத்தம் 5 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.
இதில் 7-வது வார்டில் போட்டியிட்ட சாரதாதேவி, 29-வது வார்டில் போட்டியிட்ட கிரிஜா ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இதில் ஒருவர் துணை மேயராக வாய்ப்பு உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.