உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 79 நிறுவனங்கள் மீது வழக்கு

சேலம் மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 79 நிறுவனங்கள் மீது தொழிலாளர்துறை சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சேலம்:

தமிழகம் முழுவதும் குடியரசு தினத்தன்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்படுகிறதா என்பதையும் அவ்வாறு பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களுக்கு உரிய படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  மாவட்டம் முழுவதும் 72 கடைகள், நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 30 கடை நிறுவனங்களில் உரிய அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்

மேலும் 63 உணவு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 45 உணவு நிறுவனங்களில் உரிய அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதையும் கண்டு பிடித்தனர். 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களை ஆய்வு  செய்ததில் 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உரிய அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதை கண்டறிந்தனர். 

மொத்தம் 142 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 79 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது உரிய வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், கிருபாகரன், வாசுகி, சீனிவாசன், இளைய ராஜா, அருண்குமார், சிவகுமார் மற்றும் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.