வாழப்பாடி:
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் முருகன் தலைமையில், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன், முக்கியத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கடந்த 24&ந்தேதி ஊராட்சி சார்ந்த பணி செய்து கொண்டிருந்த விலாரிபாளையம் ஊராட்சி செயலாளர் சிவசங்கர் என்பவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, இதே ஊரைச் சேர்ந்தவரும், வேப்பிலைப்பட்டி ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.