அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிபட்டி ரெயில்வே கேட் அருகே லாரியில் கடத்தி கொண்டு வந்த 18 டன் ரேசன் அரிசியை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் மேலும் இன்று கடத்தி கொண்டு வரப்பட்ட 18 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி, தேவூர், கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெளி மாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இன்று காலை சங்ககிரி அருகே போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை நடத்தினர்.
அப்போது டிரைவர் உட்பட 2 பேர் போலீசாரை கண்டதும் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து லாரியை போலீசார் சோதனை நடத்தியபோது அதில் சுமார் 18 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த லாரி எங்கிருந்து வந்தது?, அரிசி எந்த பகுதிக்கு கடத்தப்பட்டது, லாரி உரிமையாளர் யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.