உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலைய பகுதிகளில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை

ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதியிலும் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா கூறினார்.

மாலை மலர்

சேலம்,

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் சார்பில் கன்னங்குறிச்சி மற்றும் ஏற்காடு அடிவாரம் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கமிஷனர் முருகேசன் வரவேற்று பேசினார்.

போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க உதவியாக இருக்கும். திருட்டு நடந்தாலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வசதியாக இருக்கும்.

 இதற்காக மாநகர் பகுதியில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் உட்பட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

ஏற்காட்டிற்கு தினமும் அதிகம் பேர் வருவார்கள். அப்போது குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக முதல் கட்டமாக 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன என்றார்.