உள்ளூர் செய்திகள்

காடையாம்பட்டியில் 5 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன

சேலம் அருகே 5 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன

மாலை மலர்

சேலம்:

ஓமலூர் அருகே காடையாம்பட்டி தாலுகா பொம்மியம்பட்டி மேல்கொம்பை பகுதியில் சில சாயப்பட்டறைகள் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியில்லாமலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமலும் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது 5 சாயப்பட்டறைகள் வாரியத்தின் அனுமதி பெறாமலும், கழிவுநீரை சுத்திகரிக்காமல் அருகில் உள்ள நிலத்தில் குழி தோண்டி தேக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் பேரில் அந்த சாயப்பட்டறைகள் மூடப்பட்டதுடன், மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டன.

வாரியத்தின் அனுமதி பெறாமலும், கழிவுநீரை சுத்திகரிக்காமலும் சாயப்பட்டறை மற்றும் சலவை தொழிற்சாலைகள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவைகள் மூடப்படுவதுடன் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் என்ஜினீயர் கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.