கைதான பெரியசாமி, சாகித் பாஷா ஆகியோரை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் லீ பஜார் அருகே வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைதானார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் லைன் மேடு பகுதியைச் சேர்ந்த சாகித் பாஷா ஆகியோர் கடந்த 4-ந் தேதி தம்மம்பட்டியை சேர்ந்த 2 பேரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அவர்கள் வைத்திருந்த  செல்போன்களையும், பணத்தையும் பறித்து சென்றுள்ளனர்.

மேலும் கடந்த 7-ந் தேதி லீபஜார் சுடுகாடு அருகே சம்பத் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து கடை பொருட்கள் வாங்க வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருவரையும் கைது செய்து, சிறையில்  அடைத்தனர். 

மேலும் பெரியசாமி மற்றும் சாதிக் பாஷா ஆகியோர் வழிப்பறி மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் சேலம் மாநகர காவல் ஆணையாளர்  நஜ்மல் கவுடா ஆணை பிறப்பித்தார்.

அந்த உத்தரவின்பேரில்  பெரியசாமி மற்றும் சாதிக் பாஷா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.