சேலம்:
சேலம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சேலம் மாநகராட்சிக்கான 60 வார்டுகளுக்கும், 6 நகராட்சிகளுக்கான 165 வார்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளுக்கான 474 வார்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு 1514 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் வாக்குச் சாவடிகளில் மொத்தம் 6,076 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். இத்தேர்தலை கண்காணிக்க மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஒருவர், வட்டார பார்வை யாளர்கள் 41 பேர் மற்றும் நுண்பார்வையாளர்கள் 138 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக இதுவரை கண்டறியப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளையும் கண்காணித்திட 138 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 138 வாக்குச்சாவடி மையங்களில் நேரடி கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணித்திடவும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சேலம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை தலைமை யில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்மேகம் முன்னிலையில் நடைபெற்றது.
குறிப்பாக வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகள் குறித்த நேரத்தில் இருப்பதை உறுதி செய்தல், மாதிரி வாக்குப்பதிவு நடை முறைகளை கண்காணித்தல், வாக்குச்சாவடிகளில் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட நேரம், முடிவுற்ற நேரம் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலை நடத்திடும் வகையில் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.