சேலம்:
சேலம் கே.பி. கரடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50), இவர் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நே ற்றிரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து கந்தம்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பட்டர் பிளை மேம்பாலம் முகப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.