சேலம்:
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுடுபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சதீஷ்வரன் (வயது14). இவர் செவ்வாய்ப்பேட்டை நகரவை ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் பள்ளி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் சதீஷ்வரன் இரவு துணிகளை துவைத்து மாடியில் காயவைத்துள்ளார். அதை எடுப்பதற்காக இன்று காலை 2-வது மாடிக்கு சென்று கீழே இறங்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மாணவனுக்கு கால் முறிந்தது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு சக மாணவர்கள் பார்த்து மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.