திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புறங்களைப் போல கிராமங்களிலும் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பனிக்காலமாக இருப்பதால் இதன் தொல்லை பொதுமக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது.
புறநகர் பகுதிகளில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் மற்றும் சாலையோரம் இறக்கும் விலங்குகளின் உடல்கள் இவற்றிற்கு உணவாக உள்ளது. இதனை சாப்பிடும் தெருநாய்கள் பல நோய் தொற்றுக்கு ஆளாகி பார்ப்பதற்கே அறுவருப்பான நிலையில் உள்ளது.
இது பொதுமக்களை தாக்கி கடிக்கும்போது ரேபிஸ் நோய் உண்டாகிறது. இந்தியாவில் வருடத்திற்கு 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
நகர்புறங்களில் இவற்றிற்கான மருந்து கிடைத் தாலும், கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு கிடைப் பதில்லை. மாநகராட்சி உட்பட அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களிலும் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இதுவே நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்ததற்கு காரணமாக உள்ளது. வாகனங்களில் செல்பவர்களை துரத்திக் கடிக்கும் நாய்களால் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்தும் விடுகின்றனர். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் தொற்று கண்டறியப்பட்ட நாய்களை பிடித்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.