கோவை:
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை மூடிஸ் நகரைச் சேர்ந்த மலையப்பன் மகன் ஹரிகரன் (23).
இவர் கடந்த 16-ந் தேதி இருசக்கா வாகனத்தில் செல்லும் போது சாலை விபத்து ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டார்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அறுவுறுத்தவின்படி, மூளை அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருத்துவர், இருதய மருத்துவர் மற்றும் தீவிரசிகிச்சை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஹரிகரன் மூளைச்சாவு அடைந்தார்.
இதனை உறுதி செய்த மருத்துவர்கள் ஹரிகரனின் உறவினர்களிடம் உடல் உறுப்புதானம் தொடர்பாக விளக்கினர். இதற்கு உறவினர்கள் சம்மதித்து உடல் உறுப்புகளை தானம் அளிக்க விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக உறுப்புகள் தானம் செய்வதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன்படி அவரது 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் டயாலிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கு தானமாகவும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் டயாலிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது. ஹரிகரனின் இரண்டு கண்களும் தானமாக அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கும் பார்வையிழந்த இருவருக்கு பயன்பட உள்ளது.
ஹரிகரனின் உடலுக்கு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் இறுதி மரியாதை செலுத்துப்பட்டது. அவரது உடலுக்கு கலெக்டர் சமீரன் அஞ்சலி செலுத்தினார். மேலும் உடல் உறுப்புதானம் செய்த ஹரிகரனின் தாயிற்கும் மற்றும் உறவினர்களுக்கும் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட அரசு அலுவலர்கள் மரியாதை செலுத்தினர்.