உள்ளூர் செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து மெக்கானிக் பலி

கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது போக்குவரத்து பாதிப்பு

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கன்னங்குள மேட்டுத் தெருவை சேர்ந்த கருணாகரன் (வயது50). இவர் லாரி மெக்கானிக். இவருக்கு சொந்தமான டிராக்டரில் தண்ணீர் லோடு சப்ளை செய்து வந்தார்.

கருணாகரன் நேற்று பெரும்புலிப்பாக்கம் பகுதியில் இருந்து டிராக்டரில் தண்ணீரில் ஏற்றுக்கொண்டு காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஓச்சேரி அடுத்த களத்தூர் சந்திப்பு அருகே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக கருணாகரனின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கருணாகரன் டிராக்டர் அடியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான,அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால் அப்பகுதி சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.