கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் மங்களேஸ்வரி நகரை சேர்ந்தவர் செல்லம், மீனவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 50). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்துகீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தார். அவரை தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன் பரிசோதனை செய்ததில் வயிற்றில் சினைப்பையில் பெரிய கட்டி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில் பெரிய அளவிலான நீர்க்க ட்டி வயிற்றில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து சரஸ்வதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மகப்பேறு மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ராஜவசந்தகுமாரி, மூத்த மருத்துவர் ராஜு, மயக்க மருந்து நிபுணர் ராஜேஷ்வரன் ஆகியோர் இணைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதில் சரஸ்வதி வயிற்றுக்குள் இருந்த சுமார் 7 கிலோ எடையுள்ள நீர்கட்டியை டாக்டர்கள் அகற்றினர். இந்த அறுவை சிகிச்சையை சுமார் 3 மணி நேரத்தில் டாக்டர்கள் குழு வெற்றிகரமாக செய்து முடித்தது.
இதுகுறித்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட சரஸ்வதி கூறியதாவது:-
தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்துள்ளனர் என்றார்.