வைர கற்கள் 
உள்ளூர் செய்திகள்

வைர கற்கள் பறிமுதல்

ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்த வைர கற்களின் மதிப்பு ரூ. 6 கோடி என போலீசார் தெரிவித்துள்ளர்.

மாலை மலர்

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு புலனாய்வு பிரிவினர் ராமநாதபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரையை சேர்ந்த  யூசுப்சுலைமான் (39) என்பவா¢ வந்த காரில் பாலிதீன் பையில் மறைத்து வைத்திருந்த 160.09 கிராம் (800 காரட்) வைர கற்களை கைப்பற்றினர். இந்த வைரக் கற்களை ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் யூசுப் சுலைமான் கீழக்கரையை சேர்ந்த சுல்தானிடம் வைர கற்களை வாங்கியது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் மொபைலில் தொடர்பு கொண்டபோது அதே பகுதியை சேர்ந்த அக்தார் என்பவரிடமிருந்து வைர கற்களை வாங்கியதாக தெரிவித்தார். அக்தார்  ஹாங்காங் நாட்டில் இருந்து வைர  கற்களை வரவழைத்துள்ளது தெரிய வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து வைரக்கற்களை சோதனை செய்ய திருச்சியில்  உள்ள வைர பரிசோதனை நிறுவனத்துக்கு  போலீசார் அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ஹாங்காங் நாட்டு மலைப்பாறைகளில் இருக்கும் வைர வகையை சேர்ந்தவை என தெரிய வந்தது. அவற்றை இரு முறைக்கு மேலாக பட்டை தீட்டினால் பல கோடி ரூபாய் விலை மதிப்பு பெறும் எனவும் ஆய்வு செய்தவர்கள்   கூறியுள்ளனர். சர்வதேச மதிப்பில் ஒரு காரட் (200 மி.கி.) முதல் தரமான வைரம் ரூ.75 ஆயிரம் என விலை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. ராம நாதபுரத்தில்  பிடிபட்ட வைரக்கற்கள் 160.09 கிராம் (800 காரட்) என்பதால், அதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி இருக்கலாம் என்று பரிசோதனை செய்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் யூசுப்சுலைமான்   வைரக்கற்களை சட்டப்படி வாங்கி வந்ததற்கான ஆவணங்களை ஒப்படைப்பதாக  போலீசாரிடம் கூறி வருகிறார். அவருக்கு வைர கற்களை வழங்கிய கீழக்கரையை சேர்ந்த சுல்தான், அக்தார் ஆகிய இருவரும் தலைமறை வாகிவிட்டதாக  கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம்   பட்டினம்காத்தானில் உள்ள கலால் துறை இன்ஸ்பெக்டர்கள் ராமநாதபுரம் நகர்போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த வைரக்கற்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். மேலும் வைர கற்களை போலீசார் நீண்ட நாட்களுக்கு  வைத்திருக்க முடியாது  என்பதால்  கோட்டாட்சியர் மூலம் கலால் துறையினரிடம் ஒப்படைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.