ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10,500 சதுர கிலோமீட்டர் பரப்பரப்பில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் அமைந்துள்ளது. இவை ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, ராமேசுவரம் முதல் சாயல்குடி அருகே வேம்பார் (தூத்துக்குடி மாவட்டம்) வரையிலும் அமைந்துள்ளது.
இந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, வான்தீவு, காசுவார் தீவு, ஆனையப்பர்தீவு, உப்புத்தண்ணீர் தீவு, புலுவினிசல்லி தீவு, நல்லத்தண்ணீர் தீவு, தலையாரி தீவு உள்ளிட்ட 21 குட்டி தீவுகள் அமைந்துள்ளன.
கடலில் உள்ள குட்டி தீவுகள் மற்றும் பாதுகாப்பு அரணாக விளங்கக்கூடிய அரியவகை பவளப்பறைகள் மீன்களின் இருப்பிடமாகவும், இயற்கை பேரிடர் காலங்களில் மீனவ கிராமங்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது.
மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் அடுத்த படியாக தொடர்ச்சியான நீண்ட கடற்கரையாக வாலிநோக்கம், மூக்கையூர், வேம்பார் கடற்கரை விளங்குகிறது. நிலப்பகுதியில் இருந்து கடல்பகுதியில் சுமார் 3 முதல் 15 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் குட்டி தீவுகள் அமைந்துள்ளன.
தூத்துக்குடி குழுவில் வேம்பார், வாலிநோக்கம் வரையிலான 7 தீவுகள், கீழக்கரை குழுவில் 7 தீவுகள், மண்டபம் குழுவில் 7 தீவுகள் உள்ளது. இப்பகுதியிலுள்ள தீவுகளில் உப்புதன்மை காணப்பட்டாலும், சாயல்குடி அருகே கீழமுந்தல் கடலில் உள்ள நல்ல தண்ணீர் தீவில் சுவையான குடிதண்ணீர் கிடைக்கிறது.
இங்கு வேம்பு, குட்டை வடிவிலான பனைமரங்கள், தென்னைமரங்கள், பூவரசு, கல்வடோர பெர்சிகா எனும் வகையை சேர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. தீவை சுற்றி ஆழமான பகுதி என்பதால், நல்ல மீன்கள் கிடைத்தாலும், டால்பின்கள் குதித்து விளையாடுவது ரம்மியமான காட்சியாக இருக்கிறது.
மாவட்டத்தில் உள்ள தீவுகளுக்கு செல்ல வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிரின பாதுகாப்பு அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும் நிலை உள்ளது. அனுமதி பெற்றும், சிலர் அனுமதி பெறாமலும் செல்கின்றனர்.
கீழக்கரை அருகே அப்பாதீவு, வாழை தீவு. சாயல்குடி அருகே கீழமுந்தல் நல்லதண்ணீர் தீவு உள்ளிட்ட சில தீவுகளுக்கு செல்லும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், செல்வந் தர்கள் உள்ளிட்ட அதிகார தோரணையில் வரும் சிலர், விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பொழுதுபோக்கு தலமாக மாற்றி, ஆங்காங்கே உணவு கழிவுகள், பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்களை போட்டு விட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதுடன் தீவுகள் மாசடைந்து, கடலும், பவளபாறைகளும் மாசடைந்து பாதிப்புக்குள்ளாகி வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், மன்னார் வளைகுடா கடல் ஆழமான கடற்பகுதியாக இருந்தாலும் கூட மீன்வரத்து குறைவாக உள்ளது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள தீவுகளை கடந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம். பாதுகாப்பு அம்சமாக உள்ள பவளபாறைகள், மனிதர்களால் மாசடைந்து வருகிறது.
குருசடைதீவு, அப்பாதீவு, வாழைதீவு, நல்லதண்ணீர் தீவு உள்ள பகுதிகளில் தூக்கி எறியப்படும் உணவு பொருட்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. எனவே இந்த தீவு பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். கடலோர பாதுகாப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றனர்.