ராமநாதபுரம்
தமிழ்நாடு மாற்றுமுறை சமரசதீர்வு மையத்தின் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சமரசதீர்வுநாள் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்டநீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கூடுதல்மாவட்ட நீதிபதி சீனிவாசன், மகிளா கோர்ட்டு நீதிபதி சுபத்ரா, முதன்மை குற்றவியல் நீதிபதி கீதா முன்னிலை வகித்தனர். சப்கோர்ட்டு நீதிபதி கதிரவன் வரவேற்றார்.
இதில் மாவட்டநீதிபதி சண்முக-சுந்தரம் பேசியதாவது:
முன்பைவிட தற்போது கோர்ட்டுகளில் அதிகவழக்குகள் வருகின்றன. இந்த வழக்குகளில் இருதரப்பினருக்கும் வெற்றிபெறும் வகையில் சமரசதீர்வு காண இந்த சமரசதீர்வுமையம் உதவுகிறது. இதில் மேல்முறையீடு கிடையாது.
கோர்ட்டு கட்டணம் திருப்பி வழங்கப்படும். சமரசதீர்வு மூலம் வழக்குகள் தீர்க்கப்படுவதால் மற்ற வழக்குகளில் கோர்ட்டு கூடுதல்கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது.வரும்காலங்களில் சட்ட கல்வியிலும், வக்கீல் தொழிலிலும் சமரசதீர்வு என்பது பெரிய பங்கு வகிக்கும், விட்டுக் கொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை என்ற நிலை சமரசதீர்வு மூலம் ஏற்படுகிறது. எனவே சட்டம் பயின்றவர்கள் சமரசதீர்வு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வக்கீல் சங்கசெயலாளர் நம்புநாயகம், சட்டக்கல்லூரி மாணவர்கள், சமரசதீர்வு மைய வக்கீல்கள் கலந்துகொண்டனர்.