நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர்.
சாலை மறியல்
இது தொடர்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மானூர் அருகே உள்ள பள்ளமடைக்கு வண்ணார்பேட்டையில் இருந்து தாழையூத்து, தென்கலம், நல்லம்மாள்புரம் வழியாக 4கே என்ற டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் காலை 8.30 மணி அளவில் பள்ளமடைக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு திரும்பும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று திடீரென 4-கே டவுன் பஸ் மானூர் வரை நீட்டிப்பு செய்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பள்ளமடைக்கு பஸ் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளமடை ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் 4 கே பஸ்சை மானூர் வரை நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பள்ளமடையில் இருந்து வழக்கமான நேரத்தில் நெல்லைக்கு பஸ்சை இயக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து உடனடியாக மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை சமரசம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர் போக்கு வரத்து கழக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.