போடி:
போடி நகராட்சியில் 33 வார்டுகளிலும் வீடுகள்தோறும் நகராட்சி தூய்மை பணியாளர்களால் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து வாங்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் அனைத்தும் நுண் உரக்குடில்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உரமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிகளில் வீடுகள்தோறும் குப்பைகளை சரியான முறையில் பிரித்து வாங்குவது அடிப்படையான பணியாகும். இவ்வாறு குப்பைகளை நல்ல முறையில் அதிக அளவில் வாங்கிய சிறந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நகர்மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொன்னாடை போர்த்தி, சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை 20 பணியாளர்களுக்கு வழங்கினார்.
அப்போது சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் குப்பைகள் பிரித்து வாங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் விளக்கிப் பேசினார். நகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர் பொன்ராஜ், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பிரசாத் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.