உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது

கூடுதல் வட்டி கேட்டு கொடுமைபடுத்தி வந்தார். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை:

கோவை ரத்தினபுரி அருகே உள்ள சாமியப்பன் வீதியை சேர்ந்தவர் ராஜ்கு மார். இவரது மனைவி ரேஸ்மா (வயது 27).

இவர் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எனது பெற்றோர் எங்கள் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் வேணுகோபால் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தனர். அதன் பின்னர் எனது பெற்றோர் கொஞ்சம் கொஞ்சமாக வட்டியையும், அசலையும் திருப்பி கொடுத்து விட்டனர்.

இந்தநிலையில் வேணுகோபால் என்னிடம் வந்து கூடுதல் வட்டி கேட்டு கொடுமைபடுத்தி வந்தார். சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்த போது அங்கு வந்த அவர் கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்தார்.

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரேஸ்மா அளித்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் கூடுதல் வட்டி கேட்டு இளம்பெண்ணை மிரட்டிய வேணுகோபாலை கைது செய்தனர்.

அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.